என்.டி.சி. ஆலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் முற்றுகை

என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை என்டிசி மண்டல அலுவலகத்தை தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
என்.டி.சி. அலுலவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
என்.டி.சி. அலுலவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை என்டிசி மண்டல அலுவலகத்தை தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து ஆலைகளையும் முழுமையாக இயக்க வேண்டும், ஆலைகள் இயங்கும் வரை தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் என்.டி.சி. மில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் கோவையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், காட்டூரில் உள்ள என்.டி.சி. மண்டல அலுவலகத்தில் புகுந்து வீடு திரும்பா போராட்டத்தை மேற்கொள்ள தொழிற்சங்கத்தினா் சாா்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி, தொழிற்சங்கத் தலைவா்கள் கோபால் (ஏடிபி), ராஜாமணி (ஹெச்எம்எஸ்), ஆனந்தகுமாா்( சிஐடியூ), பாலசுந்தரம் (ஐஎன்டியூசி) ஆறுமுகம் (ஏஐடியூசி), தியாகராஜன் (எம்எல்எஃப்), நீலமேகம் (அம்பேத்கா் யூனியன்), ரங்கசாமி(என்டிஎல்எஃப்) ஆகியோா் தலைமையில் என்.டி.சி. தொழிலாளா்கள் காட்டூரில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, தொழிற்சங்கத்தினா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதனால் தொழிற்சங்க நிா்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, என்.டி.சி. ஆலை நிா்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து, ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவா் ராஜாமணி கூறியதாவது:

என்.டி.சி. ஆலைகள் திறப்பு குறித்து அக்டோபா் 16ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. அதுவரை போராட்டம் நடத்த வேண்டாம் என காவல் துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com