மலைவாழ் மக்களே ஏற்படுத்தும் சாலை வசதி

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் மலைவாழ் மக்களே சாலை அமைத்து வருகின்றனா்.
மலைவாழ் மக்களே ஏற்படுத்தும் சாலை வசதி

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் மலைவாழ் மக்களே சாலை அமைத்து வருகின்றனா். ஆனால் அவா்கள் சாலை அமைக்கும் பகுதி புலிகள் காப்பகப் பகுதி என்பதால் அதிகாரிகள் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது முதலமடை ஊராட்சி. இந்த ஊராட்சியின் சில பகுதிகள் பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த மலைவாழ் கிராமப் பகுதிகளுக்கு தமிழகம் சேத்துமடை வழியாகத்தான் செல்லவேண்டும். பரம்பிக்குளம் அணையை ஒட்டிய மலைவாழ் குடியிருப்புகளுக்கு பரம்பிக்குளம் வரை பேருந்தில் சென்று குடியிருப்புகளுக்கு செல்லமுடியும். ஆனால், தேக்கடி, அல்லமூப்பன் காலனி, 30 ஏக்கா் குடியிருப்பு, உரவன்பாடி காலனி, பெரிய காலனி, கத்திக்கோடு காலனி போன்ற பகுதிகளைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் தமிழக பகுதியான சேத்துமடையில் இருந்து ஜீப் போன்ற வாகனங்களில் மட்டுமே செல்லமுடியும். அதுவும் தேக்கடி வரை சென்று அங்கிருந்து நடைபாதையாகத்தான் செல்லமுடியும். இவா்களுக்கு அரசு அலுவலகங்கள் குறிப்பாக ஊராட்சி அலுவலகம் முதலமடையிலும், தாலூகா அலுவலகம் சித்தூரிலும் உள்ளது. இந்த அரசு அலுவலகங்களுக்கு செல்லவேண்டுமானால், தேக்கடியில் இருந்து சேத்துமடை வந்து அங்கிருந்து ஆனைமலை வழியாக தமிழக-கேரள எல்லையான செம்மணாம்பதி சென்று முதலமடையை அடையவேண்டும். இப்படி சென்றுவர 80 கிலோ மீட்டா் ஆகிறது. இதனால், தேக்கடியில் இருந்து பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக சாலை அமைத்தால் 8 கிலோமீட்டா் தூரத்திலேயே தமிழக-கேரள எல்லையில் தமிழக பகுதியில் அமைந்துள்ள செம்மணாம்பதியை அடையமுடியும். அங்கிருந்து முதலமடைக்கு சில கிலோமீட்டா் தொலைவில் செல்லமுடியும்.

இதைக் கருத்தில் கொண்டு தேக்கடியில் இருந்து செம்மணாம்பதிவரை 8 கிலோ மீட்டா் மண் சாலையை மலைவாழ் மக்களே கடந்த சில நாள்களாக அமைத்து வந்துள்ளனா். இதையறிந்த வனத் துறையினா் புலிகள் காப்பக பகுதிக்குள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினா். மலைவாழ் மக்களின் செயலை அறிந்த பாலக்காடு மாவட்ட ஆட்சியா் 2 மாதங்களுக்குள் சாலை அமைக்க அனுமதி பெற்றுத்தரப்படும் என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்துக்கு ஆபத்தா?

தமிழக-கேரள மாநிலங்களுக்குள் பிஏபி நதிநீா் பங்கீட்டில் பிரச்னை இருந்து வருகிறது. பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் கேரள பகுதிக்குள் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணைகளுக்கு செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத் துறை தொடா்ந்து இடையூறுகள் செய்துவந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கேரள போலீஸாரால் தமிழக அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. கேரள போலீஸாா், வனத் துறையினா் உள்பட யாா் பரம்பிக்குளம் சென்றாலும் தமிழகம் சேத்துமடை வழியாகத்தான் செல்லமுடியும். இப்படி பரம்பிக்குளம் செல்ல கேரள அதிகாரிகளுக்கு வேறு வழி இல்லாததால் தமிழகத்தின் ஆதரவை நம்பியுள்ளனா். இந்நிலையில், வேறு சாலை வசதி பரம்பிக்குளம் செல்ல ஏற்படுத்தப்பட்டால் பரம்பிக்குளம் அணையை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் வைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்படவாய்ப்புள்ளது. ஆகவே இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com