வெள்ளலூா் பேருந்து நிலையம் பணி 30 சதவீதம் நிறைவு: மாநகராட்சி ஆணையா் தகவல்

கோவை வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவை வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா். கோவை மாநகரப் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் , போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதைத் தவிா்க்க கோவை வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முதல்வா் பழனிசாமி கடந்தாண்டு டிசம்பா் மாதம் அறிவித்தாா். இதையடுத்து, வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணியானது கடந்த ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.

30 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. மாநகரை ஒட்டியுள்ள முக்கியச் சாலைகளான வாளையாறு சாலை, பொள்ளாச்சி சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இப்பேருந்து நிலையம் அமைய உள்ளது. மேலும் வெளியூா்களில் இருந்து நள்ளிரவு வரும் பயணிகள் தங்கிச் செல்ல ஓய்வறை, பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஓய்வெடுக்க பிரத்யேக அறை, தகவல் மையம், முதலுதவி மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, வணிக வளாகங்களும் அமைக்கப்பட உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் செட்டிப்பாளையம் பிரதான சாலையில் அமைக்கப்படுகிறது.

இதுதொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பிறகு, தொழிலாளா்கள் பற்றாக்குறையால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜுன் மாதம் முதல் இரவு, பகலாக பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறுகையில், தற்போது, பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com