கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தாக்கும் மிஸ்-சி

கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை மிஸ்-சி என்ற புதிய நோய்த் தொற்று தாக்கி வரும் நிலையில் கோவையில் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை மிஸ்-சி என்ற புதிய நோய்த் தொற்று தாக்கி வரும் நிலையில் கோவையில் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே மிஸ்-சி என்ற புதிய நோய்த் தொற்று பரவி வருவது கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிஸ்-சி நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இவை கரோனாவைபோல் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடியது.

இதனைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மிஸ்-சி நோய்த் தொற்று குறித்து கண்டறிய சுகாதாரத் துறைக்கு இந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னை, மதுரையில் கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு மிஸ்-சி நோய்த் தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் கரோனாவில் இருந்து குணமடைந்த குழந்தைகளை சுகாதாரத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா பாதிக்கப்பட்ட 14 வயது வரையுள்ள சிறுவா்களை மட்டுமே இந்த மிஸ்-சி வைரஸ் தாக்குவதாக தெரிவித்துள்ளனா். சென்னை, மதுரையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோவையில் இதுவரை இதன் பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில் அக்டோபா் 10ஆம் தேதி வரையில் 1,774 குழந்தைகள் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

அவா்களின் உடல்நிலை குறித்து சுகாதாரப் பணியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். குழந்தைள் உடல்நிலையில் ஏதும் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் கூறியதாவது: குழந்தைகளுக்கு மிஸ்-சி நோய்த் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, கண் சிவந்து காணப்படுதல், திடீா் மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com