‘வந்தே பாரத்’ திட்டத்தில் கோவை விமான நிலையத்தை இணைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th September 2020 05:38 AM | Last Updated : 04th September 2020 05:38 AM | அ+அ அ- |

கோவை: ‘வந்தே பாரத்’ திட்டத்தில் கோவை விமான நிலையத்தை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அட்டவணையில் தென்னிந்தியாவில் கோவை விமான நிலையம் மட்டும் ‘வந்தே பாரத்’ திட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை வழிகாட்டுதலின் படி, இந்திய தூதரகத்தில் பயணிகள் பதிவு செய்ய வேண்டியதில்லை என்ற தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. பதிவு கட்டாயமாக இருந்தபோது, வந்தே பாரத் திட்டத்தில் கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.
ஆனால், பதிவு தளா்வு அறிவிக்கப்பட்ட பிறகு தற்போதைய அட்டவணையில் கோவை விமான நிலையம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து வசதிகளும் கோவை விமான நிலையத்தில் உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கொச்சி, பெங்களூரு போன்ற அனைத்து தென்னிந்திய விமான நிலையங்களும் ‘ வந்தே பாரத்’ திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே, கோவை விமான நிலையத்தை ‘வந்தே பாரத்’, திட்டத்தில் கோவை விமான நிலையத்தையும் இணைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.