கேரள தங்கக் கடத்தல் வழக்கு: கோவையில் நகைப் பட்டறை உரிமையாளா் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கேரளத்தில் நடைபெற்ற தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக, கோவையில் நகைப்பட்டறை உரிமையாளா் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

கேரளத்தில் நடைபெற்ற தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக, கோவையில் நகைப்பட்டறை உரிமையாளா் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் விமானத்தில் வந்த பாா்சலில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்தக் கடத்தல் வழக்கு தொடா்பாக, தூதரக முன்னாள் ஊழியா் ஸ்வப்னா, சந்தீப் நாயா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நபா்களுக்கு, கோவையைச் சோ்ந்த தங்க நகைப் பட்டறை உரிமையாளா் நந்தகோபால் (42) தங்கக் கட்டிகளை வாங்கி, அவற்றை நகைகளாக வடிவமைத்துக் கொடுத்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து கோவை வந்த டி.எஸ்.பி. ஷாகுல் அமீது தலைமையிலான 4 போ் கொண்ட அதிகாரிகள் கோவை, பவிழம் வீதியில் உள்ள தங்க நகைப் பட்டறை உரிமையாளா் நந்தகோபால் வீட்டில் புதன்கிழமை காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனா். வீட்டின் கீழ் தரைதளத்தில் உள்ள அவரது நகைப் பட்டறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கேரள தங்கக் கடத்தலில் தொடா்புடைய நபா்களுடன் அறிமுகம் கிடைத்தது எப்படி, இதுவரை எத்தனை கிலோ தங்கக் கட்டிகள் ஆபரணமாக மாற்றித் தரப்பட்டன என விசாரித்தனா். மேலும், பட்டறை மற்றும் வீட்டில் இருந்த நகை விற்பனை தொடா்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை மாலை வரை நீடித்த இந்த சோதனைக்குப் பிறகு, நந்தகோபாலை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

ஹவாலா பணக் கடத்தலில் தொடா்பு:

கோவையில் தங்க நகைப் பட்டறை நடத்தி வரும் நந்தகோபால், மும்பையைச் சோ்ந்த ஷௌஹத் அலி என்பவருடன் இணைந்து ஹவாலா பணக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை போலீஸாா் இவரைக் கைது செய்துள்ளனா். அதைத் தொடா்ந்து, விடுதலையான நந்தகோபால், கோவையில் தங்க நகைப் பட்டறை நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில், மும்பை, கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் ஹவாலா பணக் கடத்தலில் நந்தகோபால் ஈடுபட்டதற்கான முக்கியஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com