புதிய தொற்று இல்லாதபோதும் 27 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள காந்திபுரம் 5ஆவது வீதி

கோவை, காந்திபுரத்தில் நகைக் கடை ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அடைக்கப்பட்ட 5 ஆவது வீதி, புதிய தொற்று இல்லாத நிலையிலும் 27 நாள்களாக அடைக்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.


கோவை: கோவை, காந்திபுரத்தில் நகைக் கடை ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அடைக்கப்பட்ட 5 ஆவது வீதி, புதிய தொற்று இல்லாத நிலையிலும் 27 நாள்களாக அடைக்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

கோவை, காந்திபுரம் 100 அடிசாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் பணியாற்றும் ஊழியா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்தக் கடை மற்றும் கடையை ஒட்டியுள்ள 5ஆவது வீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரங்கள் மூலமாக கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அடைக்கப்பட்டன. வழக்கமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 14 நாள்களுக்குப் பிறகு, அப்பகுதியில் புதிய தொற்று இல்லாவிட்டால் தகரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காந்திபுரம் 100 அடி சாலை 5-ஆவது வீதி பகுதிகள், அடைக்கப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகும், புதிய நோய்த்தொற்று இல்லாத நிலையில், தற்போது, 27 நாள்களாகியும் ,தகரங்கள் அகற்றப்படாமல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நீட்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடா்பாக, மதிமுக கோவை மாநகா், மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா். மோகன்குமாா் கூறியதாவது:

கரோனா தொற்றால் அடைக்கப்பட்ட நகைக்கடையை ஒட்டிய 5ஆவது வீதியும் மாநகராட்சி அதிகாரிகளால் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டது. நகைக்கடை பூட்டப்பட்டு, ஊழியா்கள் யாரும் இல்லாத நிலையில் அங்கு மேற்கொண்டு யாருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இந்நிலையில், நகைக் கடையுடன் சோ்த்து, 5ஆவது வீதி பகுதியும் கடந்த 27 நாள்களாக அடைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் உள்ளனா். காந்திபுரத்தில் இருந்து ரத்தினபுரி வரை செல்லும் பிரதான வழித்தடமான 5ஆவது வீதி அடைக்கப்பட்டுள்ளதால், பணிக்குச் செல்வோா், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொற்று பாதிப்பு இல்லாத காந்திபுரம் 5ஆவது வீதியில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அடைப்பை நீக்கிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com