எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி ரயில் மேம்பாலப் பணியை தொடங்காவிட்டால் போராட்டம்: நா.காா்த்திக் எம்.எல்.ஏ.
By DIN | Published On : 11th September 2020 06:04 AM | Last Updated : 11th September 2020 06:04 AM | அ+அ அ- |

கோவை: கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் கடந்த 9 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியினா் 5 கிலோ மீட்டா் தூரத்துக்கு சுற்றிச் சென்று வருகின்றனா். மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சாா்பில் 2017ஆம் ஆண்டு முதல் பல கட்டப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அதிமுக அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பகுதியில் ஆய்வு மட்டுமே மேற்கொண்டு சென்றனா். பணிகளைத் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி வெளியான நீதிமன்ற உத்தரவில், இட உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி அரசு, மேம்பாலப் பணியைத் துவங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்க அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனா். உடனடியாக ரயில்வே மேம்பாலப் பணியைத் தொடங்கா விட்டால், திமுக சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.