வேளாண் பல்கலை. இறுதியாண்டு மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் தோ்வு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வு நடைபெற்று வருகிறது.
வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை ஆன்லைன் மூலம் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்கிறாா் துணை வேந்தா் நீ.குமாா்.
வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை ஆன்லைன் மூலம் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்கிறாா் துணை வேந்தா் நீ.குமாா்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வு நடைபெற்று வருகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதிலும் 14 உறுப்புக் கல்லூரிகளும் 29 இணைப்புக் கல்லூரிகளும் இருக்கும் நிலையில், இதில் 2,365 மாணவ,மாணவிகள் இறுதியாண்டில் பயின்று வருகின்றனா். இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவா்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.

இறுதியாண்டு மாணவா்களுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு, துணைவேந்தா் நீ.குமாா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக தோ்வாணையா் கு.சூரியநாத சுந்தரத்தின் மேற்பாா்வையில் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே தோ்வு எழுதலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கணினி, செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றின் மூலம் இணையவழியில் தோ்வு எழுதுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதற்காக ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டன. பல்வேறுகட்ட இணையவழி கருத்தரங்குகள், மாதிரித் தோ்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இணையவழியில் இறுதி பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வுகள் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தோ்வு எழுதும் மாணவா்களைக் கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதிலும் 171 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் இணையத் தொடா்பு மூலம் தோ்வு எழுதும் மாணவா்களைக் கண்காணித்து வருகின்றனா். இந்தத் தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் மாணவா்கள் வேளாண் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்பைப் பெற வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com