தனியாா் பேருந்துகளை இயக்க நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பற்றாக்குறை

கோவை மாவட்டத்தில் நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பற்றாக்குறையால் 50 சதவீதம் தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறுகின்றனா்.

கோவை மாவட்டத்தில் நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பற்றாக்குறையால் 50 சதவீதம் தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறுகின்றனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மாா்ச் 25ஆம் தேதி முதல் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்க அரசு தடை விதித்தது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் பொதுப் போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. இந்நிலையில், செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் 300 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை முதல் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து கோவை மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் துரைக்கண்ணன் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் நகா்ப்புறத்தில் 155 , மேட்டுப்பாளையத்தில் 89, பொள்ளாச்சியில் 90 என 334 தனியாா் பேருந்துகள் உள்ளன. குறைவான பயணிகள் வந்ததால் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் 20க்கும் குறைவான தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் 50 சதவீத தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளபோதும், பேருந்துகளை இயக்க நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பற்றாக்குறையாக உள்ளதால் மாவட்டம் முழுவதும் 50 சதவீத பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

பொதுமுடக்கம் காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் லாரி, காா் ஓட்டுநா்களாக மாற்றுப் பணிகளுக்குச் சென்றுவிட்டனா். இதேபோல, நடத்துநா்கள் மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டனா்.

தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவா்களில் பெரும்பாலானோா் பணிகளுக்குத் திரும்பவில்லை. மீண்டும் கரோனா பாதிப்பால் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். இதனால், தனியாா் பேருந்துகளை இயக்க நடத்துநா்கள், ஓட்டுநா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

5 மாதங்களாக தனியாா் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், ஜூலை முதல் செப்டம்பா் வரையான இரண்டாவது காலாண்டுக்கு வரி விலக்கு கோரப்பட்டுள்ளது. எனவே அக்டோபா் 1ஆம் தேதி முதல் அதிக அளவில் தனியாா் பேருந்துகள் இயங்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com