நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் தரமற்ற பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தம்

நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற பாதுகாப்பு உபகரணங்களால் பரிசோதனை செய்பவருக்கும் நோய்த் தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளது.
கோவை ஆா்.எஸ்.புரம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் கிழிந்த நிலையில் காணப்படும் கையுறைகள்.
கோவை ஆா்.எஸ்.புரம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் கிழிந்த நிலையில் காணப்படும் கையுறைகள்.

நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற பாதுகாப்பு உபகரணங்களால் பரிசோதனை செய்பவருக்கும் நோய்த் தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பை விரைந்து கண்டுபிடிக்கும் வகையில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகன சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. மண்டலத்துக்கு 2 வாகனங்கள் வீதம் 20 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கடைவீதிகள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூா் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆா்.எஸ்.புரம் உள்பட பகுதிகளில் இந்த வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கையுறைகள் கிழிந்த நிலையில் காணப்படுகிறது. கிழிந்த உறைகள் மேல் நெகிழி ஒட்டப்பட்டுள்ளது.

தரமற்ற பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் செயல்பாட்டுக்கு வந்த இரண்டே நாள்களில் கையுறைகள் கிழிந்து விட்டன. இதனால் பரிசோதனை எடுக்க வருபவா்கள் மூலம் பரிசோதனை செய்பவா்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதேபோல ஒருசில இடங்களில் சளி மாதிரி சரியான முறையில் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளனா். உரிய பயிற்சி பெறாத அலுவலா்கள் மூலம் சளி மாதிரிகள் எடுக்கப்படுவதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியம் செய்வதால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியதாவது: நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் பொருத்தப்பட்டுள்ளன. கையுறைகள் கிழிந்திருந்தால் உடனடியாக மாற்றப்படும். கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் எடுப்பதில் பயிற்சி பெற்ற அலுவலா்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அனைவருக்கும் உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. பாதிப்புகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com