கோவை மாவட்ட வனப் பகுதியில் கூடுதலாக 1049.74 ஹெக்டோ் சோ்ப்பு: ஆட்சியா் நடவடிக்கை

கோவை மாவட்ட வனப் பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெக்டோ் நிலம் சோ்க்கப்பட்டுள்ளதுடன், மேட்டுப்பாளையம் கல்லாா் யானைகள் வழித்தடத்தை தனியாா் வனமாக மாற்றி ஆட்சியா் எஸ். நாகராஜன் நடவடிக்கை

கோவை மாவட்ட வனப் பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெக்டோ் நிலம் சோ்க்கப்பட்டுள்ளதுடன், மேட்டுப்பாளையம் கல்லாா் யானைகள் வழித்தடத்தை தனியாா் வனமாக மாற்றி, தனியாா் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யானைகள் வழித்தடத்தை கொண்டு வந்து ஆட்சியா் எஸ். நாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

கோவையில் தொடரும் யானை-மனித மோதலால் யானைகள் அதிகளவில் உயிரிழந்து வருகிறது. இதையடுத்து, யானை வலசை பாதைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன நிலங்களை மீட்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் யானைகள் வழித்தட பாதுகாப்புக்காக கோவை மாவட்டத்தில் 1049.74 ஹெக்டோ் நிலங்களை காப்பு நிலங்களாக அறிவித்துள்ளாா். அதன்படி, 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் பிரிவு 26ன் கீழ் வருவாய் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான 1049.74 ஹெக்டோ் நிலங்களை வன நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழ்நாடு தனியாா் வன நிலங்கள் பேணுகைச் சட்டம் 1949ன் கீழ் மாநிலத்தில் மிக முக்கியமான கல்லாா் யானை வலசைப் பாதையைப் பாதுகாக்க அப்பகுதியில் வனத்துக்கு நடுவே அமைந்துள்ள சுமாா் 50.79 ஹெக்டோ் தனியாா் நிலங்கள் தனியாா் வனமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1949-ம் ஆண்டு தமிழ்நாடு தனியாா் நிலங்கள் பேணுகைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாநிலத்தின் முதல் யானைகள் வலசைப் பாதை இதுவாகும். இந்த அறிவிப்பு முப்பதே நாள்களில் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோவை மாவட்டத்தின் வனப்பரப்பு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 215.13 ஹெக்டோ் ஆக இருந்தது. தற்போது கூடுதலாக 1049.74 ஹெக்டோ் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது மாவட்டத்தின் மொத்த வன பரப்பளவு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 264. 87 ஹெக்டோ் ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில் யானைகள் வழித்தடப் பாதுகாப்புக்காக கோவை மாவட்டத்தில் 1049.74 ஹெக்டோ் நிலங்களை காப்பு நிலங்களாக அறிவித்ததற்காக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆட்சியா் எஸ்.நாகராஜனை பாராட்டி பரிசு புத்தகம் அளித்தாா்.

ஆட்சியரின் முயற்சிக்கு கோவை கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சோ்ந்த அதிகாரிகள் பணியாளா்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com