நிதி நிறுவன அதிபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸ் காவலில் விசாரிக்க கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

கோவை: நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸ் காவலில் விசாரிக்க கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

கோவையை அடுத்த சூலூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ். இவா் பீளமேட்டில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் பங்குதாரா்களாக கனகராஜ், பாஸ்கா், சுனில்குமாா் ஆகியோா் இருந்தனா். இங்கு ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரப்படுத்தினா். இதனை நம்பி ஏராளமானோா் அந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினா். 70 ஆயிரம் பேரிடம் ரூ. 800 கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கூறியபடி பணத்தை திருப்பித் தராததால் பாதிக்கப்பட்டவா்கள் இது குறித்து கடந்த 2019இல் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் ரமேஷ், கனகராஜ், பாஸ்கா், சுனில் குமாா் ஆகியோா் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் தொகை செலுத்தியவா்களுக்கு பணத்தை திருப்பித் தந்து விடுவதாக மோசடி செய்தவா்கள் தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் அவரிடம் 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதி, ரமேஷிடம் 3 நாள்கள் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com