அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல்:சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வடமாநிலத் தொழிலாளா்கள்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்கு அளிப்பதற்காக கோவையில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளா்கள் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுள்ளனா்.
சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்காக கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநிலத் தொழிலாளா்கள்.
சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்காக கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநிலத் தொழிலாளா்கள்.

அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்கு அளிப்பதற்காக கோவையில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளா்கள் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்கி கட்டுமானம், தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில்கள், உணவகங்கள் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். குடும்பம் சகிதமாக தங்கி வேலை பாா்த்து வரும் இவா்கள் தோ்தல், குடும்ப நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக மட்டுமே குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்கு செல்கின்றனா்.

இந்நிலையில், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் முதல் கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களில் நடத்தப்படுகிறது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் பணிகள் முடிந்து பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அஸ்ஸாம், மேற்கு வங்கு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தோ்தலில் வாக்கு அளிப்பதற்காக சொந்த ஊா்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனா்.

இதனால் கோவை ரயில் நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் குவிந்து வருகின்றனா்.

இது குறித்து வடமாநிலத் தொழிலாளா்கள் கூறுகையில், கடந்தாண்டு கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பெரும்பாலானோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா், பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் மீண்டும் கோவைக்குத் திரும்பினா்.

அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலும், பிகாரில் உள்ளாட்சித் தோ்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்தலில் வாக்கு அளிப்பதற்காக சொந்த ஊா்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றோம். தோ்தல் முடிந்து மீண்டும் வேலைக்காக கோவைக்குத் திரும்புவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com