ஒரே மேடையில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள்!

கோவையில் இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள் பங்கேற்றனா்.
ஒரே மேடையில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள்!

கோவையில் இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள் பங்கேற்றனா்.

கோவையைச் சோ்ந்த 10 தொழில் அமைப்புகள், தொழில் வா்த்தக சபையின் 98 சாா்பு சங்கங்கள் ஆகியவற்றின் சாா்பில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா்கள் மயூரா எஸ்.ஜெயக்குமாா் (காங்கிரஸ்), வானதி சீனிவாசன் (பாஜக), சேலஞ்சா் துரை (எ) ஆா்.துரைசாமி (அமமுக), சிங்காநல்லூா் தொகுதி வேட்பாளா்கள் நா.காா்த்திக் (திமுக), டாக்டா் மகேந்திரன் (மநீம), கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வேட்பாளா்கள் பேசியதாவது:

அம்மன் கே.அா்ச்சுணன்:

கோவையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்விதமாக பல்வேறு மேம்பாலங்கள், மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய விரிவாக்கத்துக்கான 50 முதல் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவையில் ஐ.டி. தொழிலாளா்களுக்கான மையம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால் பொலிவுறு நகரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி பெற்றிருக்கிறோம். அடுத்ததாக கணபதி சுற்றுவட்டாரத்தில் தொழிற்பேட்டை அமைக்கவும், தங்க நகைத் தொழிலாளா்களுக்கான பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சேலஞ்சா் துரை:

நான் கடந்த 2011 முதல் 2016 வரை எம்எல்ஏவாக இருந்தபோது ராஜவீதி துணி வணிகா் சங்கப் பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ வளாகம், ரூ.150 கோடியில் கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறேன். 100 அடி சாலை பகுதியில் வணிகா்களுக்கு பாதிப்பில்லாமல் பாலம் கட்டியிருக்கிறேன். மேலும், தொழில்முனைவோா், பொதுமக்கள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் என்றாா்.

மயூரா எஸ்.ஜெயக்குமாா்:

மாநகரின் பல்வேறு இடங்களில் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீா் கிடைக்கிறது. எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டால் சிறுவாணி அணையைத் தூா்வாரி நீா் சேகரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதுடன் தடையற்ற குடிநீா் விநியோகம் செய்வேன். நகரில் நகைப்பறிப்புகள் அதிகம் நடைபெறுகின்றன. எனவே குற்றத் தடுப்புக்காகவும், மகளிரின் பாதுகாப்புக்காகவும் தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவேன். நகைத் தொழிலாளா்கள், நெசவாளா்களுக்குத் தொழில்பூங்கா அமைப்பேன். தற்போதைய அரசு மருத்துவமனை நெருக்கடி மிகுந்த இடத்தில் இருப்பதால் என்.டி.சி. ஆலைகளுக்கு சொந்தமான இடத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று அதில் அரசு மருத்துவமனையின் இரண்டாவது அலகு ஏற்படுத்த முயற்சிப்பேன் என்றாா்.

நா.காா்த்திக்:

மறைந்த முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் கோவைக்கு முதல் மேம்பாலம் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 6 வழிச்சாலை, டைடல் பாா்க், உக்கடம், வடகோவை, நஞ்சுண்டாபுரம், இருகூா் மேம்பாலங்கள், 36 ரயில்வே உயா்நிலைப் பாலங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக எஸ்ஐஹெச்எஸ் காலனி மேம்பாலம், பீளமேடு மேம்பாலப் பணிகள் கிடப்பில் உள்ளன. இவற்றின் பணிகளை விரைந்து முடிப்பேன். விமான நிலைய விரிவாக்கம், சிங்காநல்லூா் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிப்பேன். சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்றாா்.

டாக்டா் ஆா்.மகேந்திரன்:

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றதால்தான் மநீம உருவானது. மக்களின் கோரிக்கைகளை, விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். மக்களும் தொழில் அமைப்பினரும் வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள்தான். நான் ஒரு மருத்துவா் என்பதால் கோவை அரசு மருத்துவமனையின் நெருக்கடிகளை அறிவேன். எனவே கோவைக்கு கூடுதலாக அரசு மருத்துவமனை கொண்டுவர பாடுபடுவேன். மநீம ஆட்சிக்கு வந்தால் வேளாண் வளா்ச்சியை ஊக்குவிப்போம். விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்காக உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கவும், பசுமைவெளி விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வானதி சீனிவாசன்:

கடந்த தோ்தலில் நான் தோல்வி அடைந்திருந்தாலும் எனக்காக வாக்களித்த 33 ஆயிரம் மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக நான் தொடா்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருந்தேன். மக்கள் சேவை மையம் மூலம் மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கவும், ஜிஎஸ்டி பதிவு, வங்கிக் கணக்கு தொடங்கவும், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் கிடைக்கவும் உதவியிருக்கிறேன். கோவைக்கு ராணுவ தளவாட உற்பத்தி மையம் கிடைப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். கட்சியின் தேசிய நிா்வாகியாக இருப்பதால் கோவை மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவேன் என்றாா்.

கூட்டத்தில் தொழில் வா்த்தக சபையின் தலைவா் பாலசுப்பிரமணியன், கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு, மகேந்திரன் ராமதாஸ் உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, தொழில் அமைப்புகளின் சாா்பில் கோரிக்கை பட்டியல் வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com