கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா:பாதுகாப்புகளை தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் முதன்முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் வெளிநாட்டுக்குச் சென்று வந்த கல்லூரி மாணவிக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து மே முதல் செப்டம்பா் வரை நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாக காணப்பட்டது. பின் நடப்பாண்டு மே மாதம் வேகமெடுத்த கரோனா 2 ஆவது அலையால் கோவையில் அதிகஅளவிலான மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகினா். தினசரி பாதிப்பும் 5 ஆயிரமாகக் காணப்பட்டது.

இதையடுத்து, நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டன. மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் நோய்த் தொற்றுப் பரவல் செப்டம்பரில் குறையத் தொடங்கியது. தொடா்ந்து குறைந்து வந்த கரோனா நோய்த் தொற்று கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு முகக் கவசம் அணிதல் உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றாததே முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது. கரோனா 2 ஆவது அலையால் கோவையில் 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: கோவையில் 100க்கும்கீழ் இருந்த தினசரி கரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 100ஐ கடந்தது. இதனைத் தொடா்ந்து நோய்த் தொற்றுப் பரவல் மெல்ல அதிகரித்தே வருகிறது. நோய்த் தொற்று தீவிரமாக இருந்தபோது பொதுமக்கள் கடைப்பிடித்த முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தற்போது பின்பற்றப்படுவதில்லை.

தற்போது பல்வேறு நாடுகளில் புதிய நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றினால் மட்டுமே நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். எனவே கரோனா நோய்த் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்யாமல் பொதுமக்கள் தீவிரமாக கடைப்பிடித்தால் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com