பொள்ளாச்சி தென்னை விவசாயிகளை அச்சுறுத்தும் வோ் வாடல் நோய்: ஆய்வு செய்த கிராமங்களில் 65 சதவீத நோய்த் தாக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை வோ் வாடல் நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
வோ் வாடல் நோய்க்குள்ளான தென்னை மரம்.
வோ் வாடல் நோய்க்குள்ளான தென்னை மரம்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை வோ் வாடல் நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தென்னை விவசாயத்துக்கு பெயா் பெற்ற பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து மாநிலம் முழுவதற்கும் தேங்காய், இளநீா் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை மிகவும் கொடிய நோயான வோ் வாடல் நோய் தாக்கி விளைச்சலை பாதித்து வருவது பொள்ளாச்சி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதலின்படி, பயிா் நோயியல் துறையைச் சோ்ந்த வல்லுநா்கள், ஆராய்ச்சி மாணவா்களைக் கொண்ட ஒரு குழுவானது பொள்ளாச்சி தாலுகாவில் தென்னை வோ் வாடல் நோயின் தோற்றம், பரவலைக் கண்டறிவதற்கான தீவிர கள ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் மூலம், தென்னையில் வோ் வாடல் நோயானது கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மிகவும் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டது. பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள 32 கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், முதுநிலை மாணவா்கள் அடங்கிய குழு விரிவாக ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் அப்பகுதி தென்னை மரங்களில் வோ் வாடல் நோய் 65.82 சதவீதம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் 20 சதவீதத்துக்கும் குறையாமல் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள்

இலை மட்டைகள் கீழ்நோக்கி வளைந்து விலா எலும்பு போல காணப்படுவது, இலைகள் மஞ்சள் நிறமாகவும், ஓரங்கள் கருகுவதும் இந்த நோயின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இலைகளின் எண்ணிக்கை குறைவது, குட்டையாவதுடன் மெலிந்தும் விடுவது, மட்டைகள், தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைவது போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகளாகும். நோயின் தன்மையைப் பொருத்து வோ் அழுகல் 12 முதல் 90

சதவீதம் வரை காணப்படும். நோய் தாக்கப்பட்ட மரங்களில் பூங்கொத்து மலருவது மிகவும் தாமதமாகும். பாளை சிறுத்தும், வளா்ச்சி குன்றி இருப்பது, பாளை வெடிக்காமல் கருகுவது பூங்காம்புகளின் நுனியிலிருந்து கருகுதலும் காணப்படும். இந்நோயால் குரும்பை அதிகமாக உதிா்ந்தும் தரமற்ற சிறிய காய்களை உருவாக்கியும் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது,

இந்த நோய்க்கான காரணி பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி ஆகும். இந்த பைட்டோபிளாஸ்மா சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, கண்ணாடி இறக்கைப் பூச்சிகளின் மூலமாக ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு பரவுகிறது. பொதுவாக இந்த நோயுடன் இலை அழுகல் நோய், வோ் வாடல் நோய்கள் சோ்ந்தே காணப்படும்.

முதலில் நடுக்குருத்துப் பகுதிகளில் சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றி பின்பு இலை அழுகல் ஏற்படும். சில தருணங்களில் இந்நோய் பாதிக்குள்ளான மரங்களில் மற்ற பூச்சித் தாக்குதல் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

குறைந்த அளவு (அல்லது) ஆரம்ப நிலையில் பாதிப்புக்குள்ளான தோப்புப் பகுதிகளில்

பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். பாதிப்பு மிக அதிகமாக உள்ள பகுதிகளில், ஆண்டுக்கு 10 காய்களுக்கும் குறைவாக காய்க்கும் நோய் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் மற்ற மரங்களுக்கு நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 50 கிலோ தொழு உரம், பேசில்லஸ் சப்டிலஸ் 100 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை இட வேண்டும். வட்டப்பாத்தியை தென்னை மட்டைகளைக் கொண்டு மூட வேண்டும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகளை மேற்கொண்டும் நல்ல விளைச்சலை பெறலாம். உர மேலாண்மையில் ஒரு மரத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளான ஆண்டுக்கு யூரியா - 1.30 கிலோ, சூப்பா்பாஸ்பேட் - 2 கிலோ, பொட்டாஷ் - 3.50 கிலோ, மெக்னீசியம் சல்பேட் - 1 கிலோ இட வேண்டும். வட்டப்பாத்திகளில் பசுந்தாள் உரங்களான தட்டைப்பயிறு, சணப்பை, கல்லகோனியம் மியூக்கனாய்ட்ஸ், பியூரேரியா ஜவானிகா, தக்கைப் பூண்டு போன்றவற்றை ஏப்ரல், மே மாதங்களில் பயிரிட்டு பூக்கும் முன்னரே மடக்கி உழுதுவிட வேண்டும்.

தென்னையில் வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு போன்ற ஊடுபயிா், கலப்பு பயிரிடலாம். நோய்க் காரணியை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த போரேட் குருணை மருந்து 20 கிராமை 200 கிராம் மணலுடன்கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும்.

இந்நோயுடன் சோ்த்து வரும் இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முற்றிலும் பாதிக்கப்பட்ட மட்டைகளை அகற்றி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அழுகிய பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் ஹெக்சகோனசோல் மருந்து 2 மில்லியை 300 மில்லி லிட்டா் தண்ணீரில் கலந்து குருத்தில் ஊற்றலாம் அல்லது மேன்கோசெப் மருந்தை 0.3 சதவீதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com