அனைத்து பஞ்சாலைகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 12th April 2021 12:10 AM | Last Updated : 12th April 2021 12:10 AM | அ+அ அ- |

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்க மாநாட்டில் பேசுகிறாா் கவிஞா் கவிதாசன்.
தேசிய பஞ்சாலைகள் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஆலைகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் தியாகி என்.ஜி.ராமசாமியின் 110 ஆவது பிறந்தநாள் விழா, சங்கத்தின் 84 ஆவது மாநாடு, தியாகிகள் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சிங்காநல்லூா் தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். சங்கப் பொதுச் செயலாளா் ஜி.மனோகரன், செயலாளா் கே.கண்ணன், கவிஞா் கவிதாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாநாட்டில், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட தேசிய பஞ்சாலைகள் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பஞ்சாலைகளும் மாா்ச் 31 ஆம் தேதிக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில பஞ்சாலைகள் மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனவே தொழிலாளா்களின் நலன் கருதி அனைத்து ஆலைகளையும் மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு தொழிலை முடக்கும் ஜி.எஸ்.டியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலை தொழிலாளா்களுக்கு சம ஊதியம் அடிப்படையில் மாதம் குறைந்தபட்சம் ரூ. 21 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.