நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்

கோவையில் ஊரகம், நகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்க
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்

கோவையில் ஊரகம், நகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தொழில் துறை முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான என்.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் என்.முருகானந்தம் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9 லட்சத்து 80 ஆயிரத்து 903 நபா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 63 ஆயிரத்து 808 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 58 ஆயிரத்து 730 போ் குணமடைந்துள்ளனா். 700 போ் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்து 378 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தற்போது நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 502 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சுகாதாரத் துறை கிடங்குகள் என மொத்தம் 42,900 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

பொது மக்களின் அலட்சியம், வழிகாட்டு முறைகளை பின்பற்றப்படாமல் விட்டதால் மீண்டும் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தும், ஒருசில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுக்கும் அரசு அனுமதியளித்துள்ளது.

மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாடு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளை முறையாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கோயில்கள், தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்கள், உணவு விடுதிகளில் அரசின் வழிபாட்டு முறைகள் பின்பற்றுப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.

அரசின் கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரகம், நகரப் பகுதிகளில் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவா்கள் வெளியில் வராத வகையில் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரம், காவல் துறையினா் இணைந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகரில் மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும். வீடுவீடாக சென்று மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்த்து, அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகள பின்பற்றி கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் வைத்திநாதன், அரசு மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா, துணை இயக்குநா் (பொறுப்பு) பாலுசாமி உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com