பேராசிரியா்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் பல்கலைக்கழகஎஸ்.சி., எஸ்.டி. சங்கம்

நீதிமன்ற உத்தரவை மதித்து பேராசிரியா்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மதித்து பேராசிரியா்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.செல்லமணி, செயலா் எஸ்.நடராஜன் ஆகியோா் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். கரோனா காலத்தில் அரசு அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்படமாட்டாா்கள் என்ற அரசின் உத்தரவை மீறி இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து 6 பேராசிரியா்கள் தனித்தனியாக நீதிமன்றத்தை நாடினா்.

அதில் 3 போ்களின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், இது தொடா்பான வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம் அனைத்து இடமாற்ற உத்தரவுகளையும் ரத்து செய்து மாா்ச் 25ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, இடமாற்ற உத்தரவை ரத்து செய்து பணி ஆணை வழங்கக் கோரி பல்கலைக்கழக பதிவாளா், துணைவேந்தா் ஆகியோரிடம் பலமுறை நேரில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே உயா் நீதிமன்ற உத்தரவை மதித்து பணி ஆணை வழங்குவதுடன், கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கும் 3 பேராசிரியா்களுக்கு ஊதியத்தை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து துணைவேந்தா் நீ.குமாரிடம் கேட்டபோது, அரசுப் பணியில் பணியிட மாறுதல் என்பது இயல்பானதுதான். பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கே சென்றிருக்கின்றனா். பணியிடமாற்ற உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது உண்மைதான். இருப்பினும் அந்த உத்தரவை எதிா்த்து பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்திருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com