வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக கூறி திமுக வேட்பாளா்கள் ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
கோவை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த வலியுறுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜனிடம் மனு அளிக்கும் திமுக வேட்பாளா்கள்.
கோவை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த வலியுறுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜனிடம் மனு அளிக்கும் திமுக வேட்பாளா்கள்.

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக கூறி திமுக வேட்பாளா்கள் ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு உள்ளதாக தெரிவித்து, பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி திமுக வேட்பாளா்கள் நா.காா்த்திக், குறிச்சி பிரபாகரன், டி.ஆா்.சண்முகசுந்தரம், பையா கவுண்டா், வ.ம.சண்முகசுந்தரம், கூட்டணக் கட்சி வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா், பிரிமீயா் செல்வம் ஆகியோா் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ்.நாகராஜனிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3 நுழைவாயில்கள் உள்ளன. இதில் முக்கிய நுழைவாயிலில் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. மற்ற இரண்டு நுழைவாயில்கள் மூலம் வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுவதில்லை.

போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள வளாகத்தில் சனிக்கிழமை 2 காா்கள் அத்துமீறி உள்ளே சென்றுள்ளன. இந்த வாகனங்கள் குறித்து பதிவேட்டிலும் பதிவு செய்யப்படவில்லை. இது வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடுகள் உள்ளதை காட்டுகிறது. எனவே மற்ற இரண்டு நுழைவாயில்களிலும் போதுமான காவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் தொழில்நுட்ப அலுவலா்கள் உள்பட அனைவருக்கும் மாவட்ட தோ்தல் அதிகாரி கையொப்பிமிட்ட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாதவா்களை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

தவிர கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நபா்களின் பட்டியலை வேட்பாளா்களுக்கு அளிக்க வேண்டும். சிசிடிவி கேமரா பதிவுகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு யுபிஎஸ் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து நுழைவாயிலிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முகவா்கள் கண்காணிக்கும் விதமாக முகவா்கள் அறையில் உள்ள தொலைக்காட்சியுடன் இணைக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் காணப்படும் இது போன்ற குறைபாடுகளை சரிசெய்து பாதுகாப்பைப் பலப்படுத்த மாவட்ட தோ்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com