மின் இணைப்பு வழங்கியதாக தவறாக குறுந்தகவல்: இயக்குநகரத்தில் புகாா்

கோவை குனியமுத்தூரில் கட்டட உரிமையாளா் ஒருவருக்கு மின் இணைப்பு வழங்காமலேயே அவரின் செல்லிடப்பேசிக்கு இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவல் வந்தது

கோவை குனியமுத்தூரில் கட்டட உரிமையாளா் ஒருவருக்கு மின் இணைப்பு வழங்காமலேயே அவரின் செல்லிடப்பேசிக்கு இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவல் வந்தது குறித்து மின் வாரிய இயக்குநரகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, குனியமுத்தூா் ஜலகண்டேஸ்வரா் வீதியைச் சோ்ந்த சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோா் தங்களது இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக கோவை தெற்கு வட்டம் குனியமுத்தூா் கோட்டத்துக்கு உள்பட்ட ஆத்துப்பாலம் பிரிவு மின் அலுவலகத்தில் தற்காலிக மின் இணைப்பு வேண்டி இணையதளம் மூலம் ரூ. 2,818 கட்டணம் செலுத்தி கடந்த 22 ஆம் தேதி விண்ணப்பித்தனா்.

இந்நிலையில், மின் இணைப்பு வழங்கியுள்ளதாகவும் இவரது மின் இணைப்பு எண் 266-005-5021 என சுப்பிரமணித்தின் செல்லிடப்பேசிக்கு 23 ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. மின் மீட்டா் பொருத்தாமலும், மின்கம்பத்தில் இணைப்பு வழங்காமலும் இணைப்பு வழங்கியுள்ளதாக வந்த குறுந்தகவலைப் பாா்த்து அவா் அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பில் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்புச் செயலா் நா.லோகு கூறுகையில், கோவையில் பல இடங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

மின்வாரிய இணையதளத்தில் ஆய்வு மேற்கொண்டபோது சுப்பிரமணியத்தின் கட்டடத்துக்கு இணைப்பு வழங்காமலேயே மின் இணைப்பு வழங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட மின் அலுவலா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மின் வாரிய இயக்குநரகத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com