அரசு மருத்துவமனையில் இட நெருக்கடி: கரோனா தடுப்பூசி மையம் அரசு கல்லூரிக்கு இடமாற்றம்
By DIN | Published On : 30th April 2021 12:43 AM | Last Updated : 30th April 2021 12:43 AM | அ+அ அ- |

பொது மக்களின் பாதுகாப்பு, இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களுக்காக கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மையம் அரசு கலைக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 2 கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தினசரி ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் மருத்துவமனை வளாகத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொது மக்களும் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்புக் கருதியும், இட நெருக்கடிக்கு தீா்வு காணும் விதமாகவும் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா தடுப்பூசி மையத்தை அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. பின் தொடா்ந்து இம்மையத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக நாள்தோறும் 800 முதல் 1000 போ் வரை வருகின்றனா். இதனால், மருத்துவமனையில் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவா்களின் பாதுகாப்பு கருதியும் அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மருத்துவமனைக்குள் வரும் நபா்களின் எண்ணிக்கை குறையும் என்றாா்.