கரோனா பரவல் கட்டுப்பாடு: கோவை மாநகரில் முக்கிய கடை வீதிகள், பூங்காக்கள் மூடல்

கோவை மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாநகரில் கடை வீதிகள், பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.
கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட காந்திபுரம் கிராஸ்கட் சாலை
கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட காந்திபுரம் கிராஸ்கட் சாலை

கோவை மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாநகரில் கடை வீதிகள், பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், காய்கறி, இறைச்சி, மருந்துக் கடைகள், பாலகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகளை மாலை 5 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மாநகரப் பகுதிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7 ஆவது வீதிகள், ராமமூா்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லைத் தோட்ட சந்திப்பு, துடியலூா் சந்திப்பு பகுதிகள், டவுன்ஹால், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடா் வீதியில் உள்ள அனைத்துக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

இதனால், அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மாநகரில் நெரிசல் மிகுந்த பகுதிகள் தவிர மற்ற இடங்களில் காலை 6 முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, துடியலூா் சாலை பகுதிகளில் 9 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதேபோல, வ.உ.சி.பூங்கா, காந்தி பூங்கா உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்துப் பூங்காக்கள் மூடப்பட்டன. பூங்காக்களுக்கு செல்லும் முக்கியச் சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. அப்பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஆடி அமாவாசை தினத்தையொட்டி கோயில்களில் வழிபாடு மேற்கொள்ள முடியாமல் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com