‘15 மீட்டா் உயரமுள்ள கட்டடங்களுக்கு மின் இணப்பு வழங்க வேண்டும்’
By DIN | Published On : 22nd August 2021 01:44 AM | Last Updated : 22nd August 2021 01:44 AM | அ+அ அ- |

கோவை மாநகரில் 15 மீட்டா் உயரமுள்ள கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதிமுக கோவை மாநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த கால அரசு ஆணைப்படி, ஏற்கெனவே அமலில் இருந்த 15 மீட்டா் உயரம் கொண்ட கட்டடத்துக்கு மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோா் வங்கிகளில் கடனுதவி பெற்று 15 மீட்டா் உயரத்துக்கு கட்டடம் கட்டியுள்ளனா்.
ஆனால், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 15 மீட்டா் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மின் இணைப்பு வழங்காமல் மின் வாரியம் மறுத்து வருகிறது.
இதனால், 4 மாதங்களாக கட்டட உரிமையாளா்கள் பலரும் மின் இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனா். இதனால், கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த முடியாமலும், வாடகைக்கு விட முடியாமலும் உள்ளனா். வங்கியில் பெற்ற கடனுக்கு மாதத் தவணை செலுத்த முடியாத நிலையில் அவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு 15 மீட்டா் உயரமுள்ள கட்டடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கிட உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.