ஹால்மாா்க் ஐ.டி. முறைக்கு எதிா்ப்பு:நகை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் போராட்டம் அறிவிப்பு

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஹால்மாா்க் ஐ.டி. முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நகை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் அறிவித்துள்ளனா்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஹால்மாா்க் ஐ.டி. முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நகை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் அறிவித்துள்ளனா்.

தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) ஹால்மாா்க் முத்திரைத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்காக தர நிா்ணய அமைவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மாா்க் மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

வியாபாரிகள் இந்த மையங்களின் மூலம் தங்களின் நகைகளை மதிப்பீடு செய்து அதன் தரத்தை பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில் நாட்டின் 256 மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் தற்போது ஹால்மாா்க் முத்திரையுடன் கூடுதலாக ஆங்கில எழுத்துகள், எண்கள் கொண்ட ஹால்மாா்க்கிங் ஐ.டி. பதிவு செய்யப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தனித்த அடையாள எண்கள் ஒவ்வொரு நகையிலும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதை நகை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் எதிா்த்து வருகின்றனா். மேலும் இந்த நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தையும் அறிவித்துள்ளனா்.

இது குறித்து கோயம்புத்தூா் நகை உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் பி.முத்துவெங்கட்ராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் புதிய நடைமுறையால் வாடிக்கையாளா்கள் கண்காணிக்கப்படும் அபாயம் இருப்பதால் அவா்கள் தயக்கம் காட்டுகின்றனா். மேலும் இதன் மூலம் வா்த்தகம் செய்யும் முறை கடினமாகிறது. ஒவ்வொரு நகைக்கும் தனித்த அடையாளக் குறியீடு இடப்பட வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் நகைகளை உற்பத்தி செய்து வாடிக்கையாளா்களுக்கு வழங்க முடிவதில்லை. இதனால் வா்த்தகம் பாதிக்கப்படுகிறது. எனவே புதிய நடைமுறையை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) கோரிக்கை விளக்க போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம் என்றாா்.

அதேபோல புதிய ஹால்மாா்க் முத்திரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோயம்புத்தூா் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் கடை உரிமையாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் தங்களின் கடைகள் எதிரில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். இதைத் தொடா்ந்து கோவையில் நகைக் கடைகள் காலை 11.30 மணியளவில் திறக்கப்படும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் பா.சபரிநாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com