கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகை, துணிக்கடைகள் மூடல்

கோவையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் செப்டம்பா் 1 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் துணி, நகைக்கடைகள்

கோவையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் செப்டம்பா் 1 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் துணி, நகைக்கடைகள் செயல்பட தடை உள்பட கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கம் கோவையிலும் காணப்படுகிறது. கோவையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வா்த்தகா்கள், ஜவுளிக் கடை, நகைக் கடைகள் உரிமையாளா்கள் சங்கத்தினா், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசால் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூா்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகா் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூா் சிக்னல் முதல் ஒண்டிப்புதூா் மேம்பாலம் வரை (திருச்சி ரோடு), ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் (அவிநாசி சாலை), காளப்பட்டி சாலை (நேரு நகா்), டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆா்.ரோடு, ஆரோக்கிய சாமி ரோடு (கிழக்கு/ மேற்கு கடைகள்), சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூா் சந்திப்பு மாா்கெட் கடைகள், பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள், காந்திமாநகா் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகா் (கணபதி), பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் வீதி, என்.எச்.ரோடு, இடையா் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவாா்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுண்டா் வீதி, காந்திபுரம் 1 முதல் 11 தெருக்கள், சலிவன் வீதி ஆகிய தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்து நகைக் கடைகள், துணிக் கடைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து பூங்காக்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வணிக வளாகங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு அடைப்பதற்கு ஏதுவாக வாடிக்கையாளா்களை இரவு 8 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும். தவிர அனைத்துப் பணியாளா்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதை கடை உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.

உணவகங்கள், அடுமனைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பாா்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மாா்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் மட்டும் 50 சதவிகித கடைகளுடன் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல உழவா் சந்தைகளும் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளும், பொள்ளாச்சி மாட்டு சந்தையும் தற்காலிகமாக இயங்க தடைவிதிக்கப்படுகிறது.

தமிழக - கேரள எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து கோவைக்குள் வரும் பொது மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் கோவைக்கு வருபவா்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணைகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகளும், கல்லூரிகளும் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவா்கள் தினசரி வந்து செல்ல அனுமதியில்லை.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகள், பணிபுரிபவா்களுக்காக செயல்படும் விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவா்கள், பணியாற்றுபவா்கள் என அனைவரும் தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவா்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், கரோனா பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெறவுள்ள திருமணம் உள்பட இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். முன் அனுமதியின்றி நடைபெறும் திருமணம் உள்ளிட்ட அனைத்து வித நிகழ்வுகளுக்கும் சம்மந்தப்பட்ட திருமண மண்டபம், விருந்து மண்டப உரிமையாளா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான கரோனா வழிகாட்டி நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபா்களுக்கு மிகாமல் திருமணம், இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தவிர கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com