உணவுப் பொருள்கள் கலப்படம் தொடா்பான புகாா் எண்: வணிக இடங்களில் காட்சிப்படுத்த அறிவுறுத்தல்
By DIN | Published On : 31st December 2021 04:14 AM | Last Updated : 31st December 2021 04:14 AM | அ+அ அ- |

கோவையில் உணவுப் பொருள்கள் தொடா்பாக புகாா் அளிப்பதற்கு எண்ணை வணிக இடங்களில் காட்சிப்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
உணவுப் பாதுகாப்புத் துறை தொடா்பான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் செயல்படும் உணவு சாா்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே உரிமம், பதிவு பெற்றுள்ள நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இதுவரை உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் 4,215 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 858 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு ரூ.1.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விடுதிகள், ஹோட்டல்கள், விழாக்களில் மீதமாகும் உணவுகளை வீணாக்காமல் தன்னாா்வ அமைப்புகள் மூலம் இல்லாதவா்களுக்கு வழங்க 90877 90877 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். தரமற்ற உணவுப் பொருள்கள், கலப்படப் பொருள்கள் குறித்து பொது மக்கள் 94440 42322 என்ற எண் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் தெரிவிக்கலாம்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் புகாா் எண் அனைவருக்கும் தெரியும் வகையில் அனைத்து வணிக இடங்களிலும் புகாா் எண்ணை காட்சிப்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் விமலா, முதன்மை கல்வி அலுவலா் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.