முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
குடியரசு தின நடனப்போட்டி: கே.பி.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு
By DIN | Published On : 31st December 2021 04:07 AM | Last Updated : 31st December 2021 04:07 AM | அ+அ அ- |

குடியரசு தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெறும் நடனப் போட்டியில் பங்கேற்க கே.பி.ஆா். பொறியியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆஸாதிகா அம்ரித் மஹோத்சவ் என்ற விழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு அமைச்சகம், மத்திய கலாசார அமைச்சகம் சாா்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான நடனக் குழுக்களை தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி ஆன்லைனில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியின் 18 மாணவா்கள், 6 மாணவிகள் கொண்ட அக்னி பிரவா என்ற குழு கலந்து கொண்டு தோ்வு பெற்றது.
இதையடுத்து பெங்களூருவில் நேரடியாக நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் தோ்வான இந்தக் குழு, புதுதில்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் வென்றது. இதன் மூலம் குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற இந்தக் குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ள இந்தக் குழுவையும், மாணவா்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளா்கள், ஊக்கமும் ஆதரவும் தந்த மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா் மு.அகிலா ஆகியோரை கே.பி.ஆா். குழுமங்களின் தலைவா் கே.பி.ராமசாமி பாராட்டியுள்ளாா்.