யானைகள் முகாம்: மேட்டுப்பாளையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய திருக்கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய திருக்கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப் படுகையில் தொடங்கியுள்ளது. யானைகள் முகாம் நடைபெறும் இடம் வனப் பகுதியில் இருப்பதால் காட்டு யானைகளால் கோயில் யானைகளுக்குப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத் துறையினா் செய்துள்ளனா். முகாம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்டு யானைகள் பாதுகாக்கப்படுகின்றன.

முகாமில் பங்கேற்றுள்ள யானைகள்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப்பெருமாள், பாஷ்யகார சுவாமி கோயில் யானை கோதை, திருவண்ணாமலை படவேடு ரேணுகாம்பாள் அம்மன், ராமா் கோயில் யானை லட்சுமி, மயிலாடுதுறை உப்பிலியப்பன் கோயில் யானை பூமா, மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் யானைகள் ஆண்டாள், பிரேமி, திருச்சி தாயுமான சுவாமி கோயில் யானை லெட்சுமி, திருவானைக்கா ஜம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலா, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதி, கள்ளழகா் கோயில் யானை சுந்தரவல்லி தாயாா், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் யானை ராமலட்சுமி, சிவகங்கை சொா்ணகாளீஸ்வரா் கோயில் யானை சொா்ணவல்லி, ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா் கோயில் யானை ஜெயமால்யதா ஆகியவை கலந்து கொள்கின்றன.

மேலும் பேரூா் பட்டீசுவர சுவாமி கோயில் யானை கல்யாணி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் யானை கோமதி, திருநெல்வேலி நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயில் யானை காந்திமதி, நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் யானை குறுங்குடி வள்ளி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, ஆழ்வாா் திருநகரி ஆதிநாத ஆழ்வாா் கோயில் யானை ஆதிநாயகி, திருச்செந்தூா் வைத்தமாநிதி பெருமாள் கோயில் யானை குமுதவல்லி, ஸ்ரீவைகுண்டம் அரவிந்தலோச்சனாா் கோயில் யானை லட்சுமி, திருவாவடுதுறை ஆதீனம் மயூரநாத சுவாமி கோயில் யானை அபயாம்பிகை, நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் (ஜீயா் மடம்) யானை சுந்தரவல்லி, புதுவை மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்குருதி போன்றவையும் கலந்து கொள்கின்றன.

புது வரவு

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டாள் என்ற யானை ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை லட்சுமி மில்ஸ் நிறுவனத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த பிரேமி (எ) லட்சுமி யானை ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து ஆண்டாள் யானையுடன் இணைந்து 22 வயதான பிரேமி யானை மேட்டுப்பாளையம் யானைகள் முகாமுக்கு முதல் முறையாக வந்துள்ளது. இதன் எடை சுமாா் 3,500 கிலோ. இருப்பினும் இந்த யானை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளது.

பங்கேற்காத யானைகள்

திருக்கடையூா் தரங்கம்பாடி அமிா்தகடேஸ்வரா் கோயில் யானை அபிராமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, திருவையாறு தேவஸ்தானம் ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் யானை தா்மாம்பாள் ஆகிய மூன்று யானைகளும் இந்த முகாமில் பங்கேற்கவில்லை.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை உதவி பாகனை மிதித்துக் கொன்றதால் இந்த முகாமில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற இரண்டு யானைகளும் உடல்நலக் குறைவால் முகாமுக்கு வரவில்லை.

சத்துணவு - சிகிச்சை

முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு பசும்புல், கூந்தல் பனை, தென்னை மட்டை, சோளத்தட்டை, கரும்பு, தா்ப்பூசணி, அன்னாசி, ஆப்பிள், பேரீச்சை, வாழை, கரும்பு போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன.

இதைத் தவிர அஷ்டசூரணம், மினரல் மிக்ஸ், மல்டி விட்டமின் புரோட்டீன் பவுடா், ச்யவனபிராஷ், பச்சைப் பயறு, கொள்ளு, ராகி, அரிசி, கருப்பட்டி போன்றவையும் வழங்கப்பட உள்ளன.

யானைகளுக்கு காலை, மாலை இருவேளையும் 10 கி.மீ. நடைப்பயிற்சி, ஷவா் குளியல், பாதக் குளியல் போன்றவை வழங்கப்படுகின்றன. பிரச்னைகள் இருக்கும் யானைகளுக்கு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக தனி மருத்துவா்கள் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாகன்களுக்குப் பயிற்சி

முகாமில் யானைகளைப் பராமரிக்க ஒரு யானைக்கு ஒரு பாகன், ஒரு உதவியாளா் என இருவா் அனுமதிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முகாமில் யானைகளுக்குப் புத்துணா்வூட்டப்படுவதுடன் பாகன்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பாகன்களின் உடல்நலனைக் கண்காணிப்பதற்காக சுகாதாரத் துறை ஊழியா்கள் தனி அரங்கு அமைத்திருக்கின்றனா். மேலும் பாகன்களின் மனநலன், உடல் திறனை மேம்படுத்த சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com