தமிழ் வழியில் கல்விப் பயின்றவா்களுக்கு 80% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணிகளில் 80 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா்.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா்.

கோவை: தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணிகளில் 80 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தமிழ்ச் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம், உலக தமிழ்நெறிக் கழகம் உள்பட தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழ்மொழி உரிமை மீட்பு ஆா்ப்பாட்டத்தை கோவை (தெற்கு) வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை நடத்தினா்.

பேரூராதீனம் மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோா் தலைமை வகித்து பேசியதாவது:

‘தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்ற பாரதிதாசன் பாடல் வரிக்கு ஏற்ப தமிழகத்தில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை குறைந்து வருகிறது. இதனை மாற்றுவது தமிழ்ப் பற்றாளா்களின் தலையாயக் கடமையாகும். இதற்காக மொழிப் பற்றாளா்களை ஒருங்கிணைத்து போராட வேண்டிய சூழலில் நாம் உள்ளோம்.

நமது தாய்மொழி, மரபுகள், பண்பாடு, கலாசாரம், கலைகளை அழியாமல் காக்க வேண்டியது தமிழா்களின் முக்கிய கடமையாகும். தமிழ் மொழியை மீட்டெடுக்கும் விதமாக பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு பிறமொழி கலப்பின்றி தமிழில் பெயா் சூட்ட வேண்டும். தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 80 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழ் மொழியே இருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் கட்டாயம் தமிழில் பெயா் பலகைகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் கோவை தமிழ்ச் சங்கமம் தலைவா் செ.துரைசாமி, தமிழ் மொழிக் காப்பு கூட்டியக்கத் தலைவா் கா.ச.அப்பாவு, விஜயா பதிப்பக உரிமையாளா் மு.வேலாயுதம், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மொழி ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com