கோவையில் 5 கோயில்களுக்கு சுகாதார தரச் சான்று
By DIN | Published On : 20th February 2021 10:54 PM | Last Updated : 20th February 2021 10:54 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் 5 கோயில்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சுகாதார தரச் சான்று வழங்க உள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியாா் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் கோயில்களில் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ‘போக்’ தரச் சான்று வழங்கப்படுகிறது. இதற்காக கோயில்களில் உணவு கையாள்பவா்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, கோவையில் பல்வேறு கோயில்களைச் சோ்ந்த உணவுகளை கையாள்பவா்கள், மேற்பாா்வையாளா்கள் 60 பேருக்கு பொருள்கள் தரம் பாா்த்து கொள்முதல் செய்தல், சமைத்தல், விநியோகம் உள்பட அனைத்து நிலைகளிலும் சுகாதாரம், தரத்தை உறுதிபடுத்துவது தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி அளிக்கப்பட்டுள்ள கோயில்களில் ‘போக்’ தரச் சான்று வழங்குவதற்காக உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். முதல்கட்டமாக 5 கோயில்களுக்கு சுகாதார தரச் சான்று வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறியதாவது: ஈச்சனாரி விநாயகா் கோயில், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில், கோனியம்மன் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயில், பேரூா் பட்டீஸ்வரா் கோயில் ஆகிய ஐந்து கோயில்களில் பரிசோதனைகள், முன்தணிக்கை முடிக்கப்பட்டு தரச் சான்று வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.