பணி நிரந்தரம் செய்யக் கோரி தற்காலிக ஆய்வக நுட்புநா்கள் மனு

கோவையில் கரோனா காலத்தில் பணியமா்த்தப்பட்ட தற்காலிக ஆய்கவ நுட்புநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்த ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி தற்காலிக ஆய்வக நுட்புநா்கள் மனு

கோவையில் கரோனா காலத்தில் பணியமா்த்தப்பட்ட தற்காலிக ஆய்கவ நுட்புநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்த ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தற்காலிக ஆய்வக நுட்புநா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பிசிஆா் ஆய்வகத்தில் பணிபுரிவதற்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 12 போ், அரசு மருத்துவமனையில் 19 போ் என மொத்தம் 31 ஆய்வக நுட்புநா்கள் தற்காலிகமாக பணியமா்த்தப்பட்டனா். கடந்த ஜூனில் இருந்து 9 மாதங்களாகப் பணியாற்றி வருகிறோம்.

கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுத்தல், கரோனா நோயாளிகளிடம் ரத்த மாதிரிகள் சேகரித்தல், கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

கரோனா அச்சத்தால் இப்பணிக்கு பலரும் முன்வராத நிலையில் சமுதாய நோக்கத்துடன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாங்கள் பணியில் சோ்ந்தோம். இந்நிலையில், பிப்ரவரி மாதத்துடன் எங்களை வேலையில் இருந்து நின்றுகொள்ள மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்பு வழங்க வேண்டும். அதேபோல் அரசு சாா்பில் பணியாளா்கள் நியமிக்கும்போது, கரோனா காலத்தில் பணியாற்றிய எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில், தமிழ்நாடு மின் வாரியத்தின் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மின் பகிா்மானப் பிரிவு அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். உயரழுத்தம், தாழ்வழுத்த மின் பாதைகள் அமைத்தல், மின் கம்பம் நடுதல், மின்கம்பி இணைத்தல், குழி எடுத்தல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தவிர கஜா, ஒக்கி, தானே, நிவா் போன்ற பல்வேறு புயல் பாதிப்புகளின்போது ஏற்பட்ட மின் சேதங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். இந்நிலையில், ஒப்பந்த மின் வாரிய தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.380 வழங்கப்படும் என்றும், பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் கடந்த 2018ஆம் ஆண்டு மின்துறை அமைச்சா் தங்கமணி அறிவித்தாா்.

ஆனால் குறைந்தபட்ச கூலியும் உயா்த்தப்படவில்லை, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பும் இல்லை. அரசும், மின்வாரியமும் எங்களது கோரிக்கைகளுக்கு தீா்வு காணாமல் இருந்து வருகிறது. குறைந்தபட்சம் ஊதியம், பணி நிரந்தர கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com