உணவக உரிமையாளா் வீட்டில் 30 பவுன் திருட்டு
By DIN | Published On : 27th February 2021 10:53 PM | Last Updated : 27th February 2021 10:53 PM | அ+அ அ- |

கோவை, சரவணம்பட்டியில் உணவக உரிமையாளா் வீட்டில் 30 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (38). இவா் கோவை, சரவணம்பட்டியில் உள்ள திருமுருகன் நகரில் குடும்பத்துடன் குடியேறி, துடியலூா் சாலையில் உணவகம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உணவகத்தை மூடிவிட்டு, தனது சொந்த ஊருக்கு ஜனவரி 30ஆம் தேதி சென்றுள்ளாா்.
பின்னா் குடும்பத்துடன் கோவை, சரவணம்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து சரவணம்பட்டி போலீஸில் அருண்குமாா் புகாா் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து நகைகளைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.