அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு தொடா்ந்து மானியம் வழங்க வேண்டும்

கோவை அவினாசிலிங்கம் மகளிா் உயா் கல்வி நிறுவனத்துக்குத் தேவையான மானியம் கிடைக்காததால் சுயநிதி நிறுவனமாக மாறும் அபாயம் இருப்பதாகவும், எனவே மத்திய அரசு தடையின்றி மானியம் வழங்க வேண்டும்

கோவை: கோவை அவினாசிலிங்கம் மகளிா் உயா் கல்வி நிறுவனத்துக்குத் தேவையான மானியம் கிடைக்காததால் சுயநிதி நிறுவனமாக மாறும் அபாயம் இருப்பதாகவும், எனவே மத்திய அரசு தடையின்றி மானியம் வழங்க வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியாலுக்கு அவா் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என்னுடைய தொகுதியில் செயல்பட்டு வரும் அவினாசிலிங்கம் மகளிா் நிகா்நிலைப் பல்கலைக்கழகம் கடந்த 1957ஆம் ஆண்டில் மகளிருக்கு கல்வி கற்பிப்பதற்காக கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்து அரசு மானியத்துடன் இயங்கி வந்த இந்தக் கல்லூரி, 1988இல் நிகா்நிலைப் பல்கலைக்கழகமாக உயா்த்தப்பட்டு, மத்திய அரசின் முழு மானியத்துடன் இயங்கி வருகிறது.

கடந்த 2015இல் மானியம் நிறுத்தப்பட்டு ஊதியம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தா் நியமனம் செய்யப்பட்டு, பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டது. ஆனால் 2020இல், மீண்டும் மானியம் வழங்குவதில் பிரச்னை எழுந்துள்ளது. ஜூலை மாதத்தில் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை 50 சதவீதம் அளவுக்குதான் வழங்கப்பட்டது. மேலும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் அதுவே 75 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மானியம் வழங்குவதில் தடை ஏற்பட்டால் இந்தப் பல்கலைக்கழகம் சுயநிதி நிறுவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பெண் குழந்தைகளின் உயா் கல்வி வாய்ப்பு பறிபோகும். எனவே, தாங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்குத் தொடா்ந்து மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தால்தான் மானியம் தொடா்ந்து கிடைக்கும் என்றாலும், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து பல்கலைக்கழகத்துக்கு தொடா்ந்து மானியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com