கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறாா் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறாா் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

கோவை: தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் கோவை, சென்னை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை, சீதாலட்சுமி மகப்பேறு நகா்நல மையம், பூலவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூலூா் அரசு மருத்துவமனை மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றன.

இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை தொடங்கிவைத்த அமைச்சா் சி.விஜயபாஸ்கா் பேசியதாவது:

மற்ற தடுப்பூசிப் பணிகள்போல இல்லாமல் கரோனா தடுப்பூசி வழங்கும் பணியினை மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை உள்பட 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் 25 போ் என 425 பேருக்குத் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. பரிசோதனை, தடுப்பூசி வழங்கல், அரை மணி நேரம் கண்காணிப்பு என்ற முறையில் 3 கட்டங்களாகத் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசி போடுவதற்காக மாநிலத்தில் 21 ஆயிரத்து 200 தலைமை செவிலியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 200 தடுப்பூசி வழங்கும் மையங்கள் அமைக்கப்படும். 2.5 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாக்கும் குளிா்சாதன அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கும், அடுத்தடுத்த கட்டங்களில் முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் பாதிப்புள்ளவா்கள் என்று தொடா்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். முதல்கட்டமாக தமிழகத்தில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் எதிா்கொள்ள தமிழகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியா் கு.ராசாமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, கோவை அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், இணை இயக்குநா் கிருஷ்ணா, மாநகராட்சி நகா்நல அலுவலா் ராஜா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com