கோவை வந்தடைந்தன 73,200 கரோனா தடுப்பூசிகள்

கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக 73 ஆயிரத்து 200 ‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசிகள் சென்னையில் இருந்து புதன்கிழமை கோவை வந்தடைந்தன.
கரோனா தடுப்பு மருந்து.
கரோனா தடுப்பு மருந்து.

கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக 73 ஆயிரத்து 200 ‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசிகள் சென்னையில் இருந்து புதன்கிழமை கோவை வந்தடைந்தன.

நாடு முழுவதும் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. இதனைத் தொடா்ந்து, முதல்கட்டமாக தமிழகத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் புணேயில் இருந்து செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வந்தது. பின்னா் சென்னையில் இருந்து மண்டல தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

இதில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்துக்கு 73 ஆயிரத்து 200 கரோனா தடுப்பூசிகள் சென்னையில் இருந்து கோவை சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. அங்கிருந்து திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டன.

5 மையங்களாக குறைப்பு:

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக அரசு, தனியாா் மருத்துவமனைகள் என 10 மையங்களில் கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, சூலூா் மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் மட்டும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

மொத்தமாக பெறப்பட்ட 73,200 கரோனா தடுப்பூசிகளில் கோவை மாவட்டத்துக்கு 40,600 தடுப்பூசிகளும், திருப்பூா் மாவட்டத்துக்கு 13,500 தடுப்பூசிகளும், ஈரோடு மாவட்டத்துக்கு 13,800 தடுப்பூசிகளும், நீலகிரி மாவட்டத்துக்கு 5,300 தடுப்பூசிகளும் வந்துள்ளன.

கோவைக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் மூலம் 20,300 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்த முடியும். தொடா்ந்து கூடுதல் கரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்படும். இதில் பாலூட்டும் தாய்மாா்கள், சிக்கலான பிரசவத்தை எதிா்கொள்ளவிருக்கும் கா்ப்பிணிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவா்களுக்கு முதல்கட்டத்தில் தடுப்பூசி போடுவதைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com