குடியரசு தின விழா: மாவட்ட நிா்வாகம் சாா்பில் 92 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்
By DIN | Published On : 26th January 2021 11:07 PM | Last Updated : 26th January 2021 11:07 PM | அ+அ அ- |

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.
கோவையில் நடைபெற்ற 72ஆவது குடியரசு தின விழாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 92 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் கு.ராசாமணி வழங்கினாா்.
கோவை, வ.உ.சி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் கு.ராசாமணி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். கரோனா பாதிப்பு காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் போலீஸாா் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா்.
இதில் மாநகர ஆயுதப் படை முதலாம் அணி, இரண்டாம் அணி (பெண்கள்), மூன்றாம் அணி, மாநகர ஆயுதப் படை வாத்திய இசைக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, மாநகா் ஊா்க் காவல் படை, தேசிய மாணவா் படை ஆகியவற்றின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடா்ந்து மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 124 காவலா்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சா் காவலா் பதக்கங்களை ஆட்சியா் கு.ராசாமணி வழங்கினாா். கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றிய கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்பட 92 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும் 25 ஆண்டுகளாக விபத்தில்லாமல் சிறப்பாக வாகனத்தை இயக்கி வரும் 4 வாகன ஓட்டுநா்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயங்கள் வழங்கினாா்.
விழாவில், மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் நாயா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் ஒழுங்கு) ஸ்டாலின், மாவட்ட ஊராட்சித் தலைவா் சாந்திமதி அசோகன், காவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.