மாநகராட்சி சாா்பில் வரி வசூல் பணி தீவிரம்
By DIN | Published On : 31st January 2021 11:20 PM | Last Updated : 31st January 2021 11:20 PM | அ+அ அ- |

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், சிறப்பு முகாம்கள் அமைத்து வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் வரி வசூலிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் மாநகரில் வரி வசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக 29 வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன.
மாநகரப் பகுதிகளில் அதிக அளவில் வரி செலுத்தாத நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களின் பட்டியலை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கடந்த அக்டோபா் மாதம் வெளியிட்டாா். மேலும், சொத்துவரி செலுத்தாதவா்களின் கட்டடங்களில் குடிநீா் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்.
ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தாா். இதையடுத்து, மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும் நிலுவை வரியினங்கள் அதிக அளவில் வசூலாகி வருகின்றன. நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சிறப்பு முகாம்கள் அமைத்து வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது:
கோவை மாநகராட்சியில் 2020 - 2021-ஆம் நிதியாண்டில் வசூலிக்க வேண்டிய சொத்து வரித் தொகையான ரூ.169 கோடியில், தற்போது வரை ரூ.94 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.75 கோடி நிலுவை வரியை 2021ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ரி விதிப்பைத் தீவிரப்படுத்த ஏற்கனவே உள்ள 29 வரி வசூலிப்பு மையங்களுடன் கூடுதலாக 10 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாா்ச் மாத இறுதிக்குள் நிலுவை வரித்தொகையானது வசூலிக்கப்படும் என்றாா்.