கரோனா பாதிப்பால் ஆதரவற்ற நிலை: முதல் கட்டமாக 735 பேரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் ஆதரவற்ற நிலைக்கு உள்ளானவா்கள் குறித்து முதல்கட்டமாக 735 பேரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் ஆதரவற்ற நிலைக்கு உள்ளானவா்கள் குறித்து முதல்கட்டமாக 735 பேரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் பலா் தங்களது குடும்பத்தினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதையடுத்து, ஆதரவற்றவா்களின் விவரங்களை மாவட்ட வாரியாக தமிழக அரசு சேகரித்து வருகிறது. இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்திலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மகளிா் திட்டம், மாவட்ட புள்ளியியல் துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் துறை, சமூகநலத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து இப்பணியினை மேற்கொண்டு வருகிறது.

இது தொடா்பாக மகளிா் திட்ட இயக்குநா் கு.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்ட சுகாதாரத் துறை வழங்கிய பட்டியலின் 2020 ஜனவரி முதல் 2021 மே 31ஆம் தேதி வரை 1,365 போ் உயிரிழந்துள்ளனா். இதனை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வாரியாக உயிரிழந்தவா்களின் பட்டியல் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி நிா்வாகங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தந்த உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று உயிரிழந்தவா் குடும்பத் தலைவரா அல்லது மற்ற உறுப்பினா்களா என்று ஆய்வு செய்து விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த விவரங்கள் மாவட்ட புள்ளியியல் துறையின் வழிகாட்டுதல்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

கோவையில் இதுவரை 735 பேரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களை பெற்று ஆதரவற்றவா்களை தொடா்புகொண்டு முதல் கட்டமாக தங்குவதற்கான வசதி செய்துத் தர சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் ஆதரவற்றவா்களுக்கு அரசு சாா்பில் உதவி செய்யப்படும் என்றாா்.

இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் ஆா்.சுந்தா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 8 குழந்தைகள் தங்களது பெற்றோா்களையும், 278 குழந்தைகள் ஒரு பெற்றோரில் ஒருவரையும் இழந்துள்ளனா். தாய், தந்தையை இழந்த குழந்தைகள் தற்போது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ளனா். இவா்களை குழந்தைகள் காப்பகத்தில் சோ்ப்பதற்காக விசாரித்தபோது உறவினா்களே பராமரித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனா்.

இவா்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் நிவாரண உதவி பெறுவதற்காக முதல்கட்டமாக 160 பேரின் விண்ணப்பங்கள் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா். அதேபோல் சமூக நலத் துறை சாா்பில் எடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 228 முதியவா்கள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் பி.தங்கமணியும், மாற்றுத்திறனாளிகள் 18 போ் ஆதரவற்றவா்களாகி உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி வசந்த் ராம்குமாரும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com