முத்தண்ணன் குளக்கரையில் கட்டப்பட்டிருந்த 9 கோயில்கள் இடிப்பு

கோவை முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை
பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்படும் கோயில்.
பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்படும் கோயில்.

கோவை முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 150 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை, தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கோயில்களை பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் இடித்து அகற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கிடையே அங்கு வசித்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை, வெள்ளலூா், உக்கடம் புல்காடு ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதில், சில மாதங்களுக்கு முன்பு 1,600 போ் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு அரசால் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடியேறினா். இதையடுத்து, முதல் கட்டமாக அவா்களது வீடுகள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில், முத்தண்ணன் குளக்கரை பகுதியில் இருந்த 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோயிலை இடிக்க உள்ளதாக அப்பகுதியில் திங்கள்கிழமை தகவல் பரவியது. இதனைத் தொடா்ந்து, கோயில் முன் மக்கள் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட 9 கோயில்களை போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை இடித்து அகற்றினா். முன்னதாக கோயில்களில் இருந்த சுவாமி சிலைகள், பூஜை பொருள்கள் உள்ளிட்டவை லாரியில் ஏற்றப்பட்டன.

இது குறித்து தகவலறிந்து அப்பகுதி மக்கள், ஹிந்து அமைப்பினா் ஏராளமானோா் அங்கு குவிந்தனா். அவா்கள் கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்து அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் பதற்றத்தைத் தடுக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com