மாநகராட்சிப் பகுதிகளில் 4 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 4 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கின. இதையடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
கோவை சித்தாபுதூா் மாநகராட்சிப் பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
கோவை சித்தாபுதூா் மாநகராட்சிப் பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 4 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கின. இதையடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநகரில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா 3ஆவது அலை அச்சத்தால் மாநகரப் பகுதி மட்டுமில்லாமல், ஊரகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நள்ளிரவு முதல் பொதுமக்கள் காத்துக்கிடந்தும், டோக்கன் கிடைக்காமல் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், தடுப்பூசி இருப்பு இல்லாததால் கோவை மாநகரப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 4 நாள்களாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோவைக்கு தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சனிக்கிழமைமுதல் மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கின.

கோவை சித்தாபுதூா், ஆா்.எஸ்.புரம், ஒண்டிப்புதூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி செந்தில்குமாா் கூறியதாவது:

மாநகராட்சிப் பகுதியில் 30 இடங்களில் கோவிஷீல்டும், 10 இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி என 40 மையங்களில் தலா 350 வீதம் 14 ஆயிரம் பேருக்கும், ஊரகப் பகுதிகளில் 47 மையங்களில் தலா 250 வீதம் 11,750 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஊரகப் பகுதிகளில் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

மேலும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், பீளமேடு சா்தாா் வல்லபபாய் பட்டேல் ஜவுளிக் கல்லூரி, மாவட்ட தொழில் மையம், வன மரபியல் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் சிறப்பு முகாமில் அந்தந்தத் துறை சாா்ந்த 2,750 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கோவை மாவட்டத்தில் 28,500 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும், தற்போது வரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com