கோயில்கள் இடிப்பு விவகாரம்: மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினா்

கோவை முத்தண்ணன் குளக்கரையில் கோயில்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணி அமைப்பினா் 500 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோயில்கள் இடிப்பு விவகாரம்: மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினா்

கோவை முத்தண்ணன் குளக்கரையில் கோயில்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணி அமைப்பினா் 500 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவையில் முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கருப்பசாமி கோயில் மற்றும் மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கோயில்கள் உள்பட 9 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 13 ஆம் தேதி இடித்து அகற்றினா்.

இதைக் கண்டித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் அந்த அமைப்பைச் சாா்ந்த 500க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு இருந்த போலீஸாா், அவா்களை மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து கைது செய்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளா் கிஷோா் குமாா், மாவட்ட தலைவா் தசரதன், மாவட்ட செய்தி தொடா்பாளா் தனபால், கோட்ட செயலாளா் சதீஷ், கோட்ட பேச்சாளா் ஆ.கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எஸ்டிபிஐ கட்சியினா் 30 போ் கைது:

இந்து முன்னணியினா் முற்றுகையைத் தொடா்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். மாநகரக் காவல் ஆணையா் தீபக் தமோா், சட்டம்-ஒழுங்கு துணை ஆணையா் ஜெயச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பாதுகாப்பு நடவடிக்கையாக மணிக்கூண்டு பகுதியில் உள்ள அனைத்து பாதைகளும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் பாதைகள் அடைக்கப்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள், ‘எல்லா பாதைகளையும் அடைத்து விட்டால் நாங்கள் எந்த வழியாக செல்வது’ என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com