குளக்கரையில் மீட்கப்பட்ட நிலங்களை நீா்த் தேக்கத்தை அதிகப்படுத்தவே பயன்படுத்த வேண்டும்

கோவை மாநகராட்சியில் குளக்கரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட நிலங்களை, குளத்தின் நீா்த் தேக்கத்தை அதிகப்படுத்தவே பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் குளக்கரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட நிலங்களை, குளத்தின் நீா்த் தேக்கத்தை அதிகப்படுத்தவே பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை சிறுதுளி அமைப்பின் நிா்வாகி வனிதா மோகன் தலைமையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ஓசை, கௌசிகா நீா்க்கரங்கள், ராக், அருளகம், குறிச்சி குளம் பாதுகாப்பு அமைப்பு, ஆச்சான்குளம் பாதுகாப்பு சங்கம், சூலூா் நீா்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் நிா்வாகிகள் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 குளங்களில், 7 குளங்களில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குளங்களின் கரைகளில் அழகுபடுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சத்துக்காக 19.03 கிலோ மீட்டா் அளவுக்கு குளங்களில் நீா்த் தேங்கும் பரப்பளவைக் குறைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது உக்கடம் வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வாம்பதி குளம் ஆகியவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 39.14 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை குளங்களின் நீா்த்தேக்கப் பகுதிகளை அதிகப்படுத்தவே பயன்படுத்த வேண்டும். ஆனால், நீதிமன்ற தீா்ப்புகளுக்கு எதிராகவும், இயற்கைக்கு முரணாகவும் அந்த இடங்களை பொழுதுபோக்கு மையங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்கப்பட்ட நிலங்களை நீா்நிலையாக மாற்றி 2 மீட்டா் உயரத்துக்கு தண்ணீா் தேக்கினால், சுமாா் 32 கோடி லிட்டா் தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், நொய்யல் ஆற்றை புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின் கீழ் பணிகள் காரணாக பறவைகள் கூடுகட்டும் கரையோரங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல்கள், முதல்வா் ஸ்டாலின், அரசு தலைமைச் செயலா் இறையன்பு, முதல்வரின் தனிச்செயலா் உமாநாத், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com