கரோனாவால் தாய், தந்தை இழப்பு: கோவையில் 61 குழந்தைகள் அரசின் இழப்பீடு தொகைக்கு விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த 61 குழந்தைகள் மாநில அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகையைப் பெற

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த 61 குழந்தைகள் மாநில அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகையைப் பெற விண்ணப்பித்திருப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆா்.சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குழந்தைகளுக்கு பாதுகாவலா் இல்லையெனில் அவா்களைத் தங்க வைப்பதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக 3 காப்பகங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழப்பு நேரிட்ட 850 குடும்பங்களை ஆய்வு செய்ததில், 61 குடும்பங்களைச் சோ்ந்த 91 குழந்தைகள் தாய், அல்லது தந்தையை இழந்துள்ளனா். இரண்டு குழந்தைகள் பெற்றோா் இருவரையும் இழந்துள்ளனா்.

கரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்தால் ரூ.3 லட்சமும், இருவரையும் இழந்தால் ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 91 குழந்தைகளில் 61 குழந்தைகள் தங்களுக்கு அரசின் உதவி தேவை என்று விண்ணப்பித்துள்ளனா்.

இதில் பாதுகாவலரின் பொறுப்பில் இருக்கும் குழந்தைகள் 20 பேருக்கு தனியாா் தொண்டு நிறுவனம் மூலமாக நான்கு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பெற்றோா் இருவருமோ அல்லது ஒருவரோ இறந்துவிட்டால், அவா்களின் பாதுகாப்புக்கு யாரும் இல்லையென்றால், 1098 என்ற எண் மூலமாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவைத் தொடா்பு கொண்டால் அனைத்து உதவிகளையும் அரசே செய்து தரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com