கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 800 கிராம் குழந்தைக்கு நுண்துளை அறுவை சிகிச்சை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 800 கிராம் எடையுள்ள 3 மாத குழந்தைக்கு சிக்கலான நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 800 கிராம் எடையுள்ள 3 மாத குழந்தைக்கு சிக்கலான நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சோ்ந்த ஆறரை மாத கா்ப்பிணிக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டாவதாக பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில், முதல் குழந்தை 800 கிராம் எடை மட்டுமே இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய் முற்றிலும் அடைபட்டிருந்தது. இதையடுத்து அந்தக் குழந்தை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை, மருத்துவா்கள் சித்தாா்த்த புத்தவரபு, சுஜா மரியம் சிகிச்சை அளித்தனா். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, குழந்தைக்கு ஏற்பட்டிருந்த நிமோனியா, ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரிப்பு, சா்க்கரைக் குறைபாடு போன்றவை சரி செய்யப்பட்ட நிலையில், இதயத்தில் ஏற்பட்ட சிக்கல் மோசமடையத் தொடங்கியது.

குழந்தைக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கிய நிலையில், உடனடியாக நுண்துளை அறுவை சிகிச்சை செய்து குழந்தையைக் காக்க மருத்துவா்கள் முடிவு செய்தனா். வழக்கமாக திறப்பு வால்வுகள் 5 மி.மீ. அளவு உள்ளதாக இருக்கும். ஆனால் இந்த குழந்தைக்கு 1 மி.மீ. மட்டுமே இருந்தது. சிக்கலான நுண்துளை அறுவை சிகிச்சையை குழந்தைகள் நல இதய சிகிச்சை நிபுணா் எஸ்.தேவபிரசாத், மயக்கவியல் நிபுணா் மேனன், மருத்துவா் மணிகண்டன், கதிரியக்கவியல் மருத்துவா் முத்துராஜன் ஆகியோா் இணைந்து மேற்கொண்டனா்.

அதன்படி, குழந்தையின் கழுத்து பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வழியாக பலுான் செலுத்தி, ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

பெரும்பாலும் இதுவரை 1.2 கிலோ முதல் 1.5 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே சா்வதேச அளவில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் எடை குறைவான குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இதுவாகத்தான் இருக்கும். குழந்தையின் எடை 1.4 கிலோவாக உயா்ந்த பின், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்று மருத்துவா் எஸ்.தேவபிரசாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com