கோவையில் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்

கோவை மாநகரில் 5 நாள்களுக்குப் பிறகு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
கோவையில் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்

கோவை மாநகரில் 5 நாள்களுக்குப் பிறகு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

மத்திய அரசிடம் இருந்து கரோனா தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடங்கியிருந்தன. கோவை மாவட்டத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடந்த 5 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தனா்.

இந்நிலையில் கோவைக்கு தற்போது 7 ஆயிரத்து 500 கோவேக்சின் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள 5 மண்டலங்களில் மொத்தம் 36 மையங்களின் மூலமாக வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்த தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணை கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டன. அதன்படி, 6 ஆயிரத்து 840 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது, சென்னையில் இருந்து பெறப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிகள் கோவைக்கு வந்து சோ்ந்ததை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ளவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அதேநேரம் ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. சென்னையில் இருந்து இன்னும் முழுமையாக தடுப்பூசிகள் வரவில்லை. இவை வந்தவுடன் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com