மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி செலுத்தாததால் மக்கள் ஏமாற்றம் ஊழியா்களுடன் வாக்குவாதம்

கோவை மாநகராட்சி சிறப்பு மையங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசிகள் செலுத்தப்படாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்

கோவை மாநகராட்சி சிறப்பு மையங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசிகள் செலுத்தப்படாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, மாநகரில் உள்ள 39 மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக, அனைத்து மையங்களிலும் இடைவெளியின்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் அனைத்து மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதில் பல மையங்களில் 9 மணிக்கு மேல் தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டன. இதையடுத்து, 9 மணிக்கு பெரும்பாலான மையங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குனியமுத்தூா் மாநகராட்சிப் பள்ளி முன்பு 100க்கும் மேற்பட்டோா் காலை முதலே தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்தனா். திடீரென தடுப்பூசி இருப்பு இல்லை என கூறப்பட்டதால் மக்கள் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் மாநகராட்சிக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. எங்களுக்கு தடுப்பூசிகள் கிடைத்ததும் தாமதிக்காமல் அனைவருக்கும் செலுத்துகிறோம். இருப்பு இல்லாததால் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தவில்லை. வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்தப்படும் தினத்துக்கு முந்தைய நாள் அனைத்து மையங்களிலும் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்புப் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் மக்கள் தேவையின்றி வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com