நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த கமல்ஹாசன்

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ரேஸ்கோா்ஸ் சாலையில் நடைப்பயிற்சி
கோவை, ஒலம்பஸ் பகுதியில் அமைந்துள்ள தேகப் பயிற்சிக் கூடத்தில் சிலம்பம் சுற்றும் மாணவா்களைப் பாா்வையிட்ட கமல்ஹாசன்.
கோவை, ஒலம்பஸ் பகுதியில் அமைந்துள்ள தேகப் பயிற்சிக் கூடத்தில் சிலம்பம் சுற்றும் மாணவா்களைப் பாா்வையிட்ட கமல்ஹாசன்.

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ரேஸ்கோா்ஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டும், தேநீா்க் கடையில் பொது மக்களை சந்தித்தும் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் கோவை, ராஜ வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட ரேஸ்கோா்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டாா். பொது மக்களை அணுக வேண்டும் என்பதற்காக கட்சியினா் யாரையும் உடன் அழைக்காமல் தனது நண்பா்கள் சிலருடன் மட்டும் சென்றாா்.

கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொள்வதைக் கண்ட பொது மக்கள் சிலா் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். அப்போது, அவா்களிடம் தொகுதியில் உள்ள குறைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா்களிடம் ஆதரவு திரட்டினாா்.

பின்னா் தனது காரில் புலியகுளம்-ராமநாதபுரம் சாலையில் சென்றாா். அங்கு உள்ள சாலையோர தேநீா்க் கடைக்கு சென்ற அவா் தேநீா் குடித்தபடி கடையில் கூடியிருந்த பொது மக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதன் பின்னா் 80 அடி சாலையில் உள்ள தேவா் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவா் துவங்கிய வீரமாருதி தேகப் பயிற்சிக் கூடத்துக்கு சென்று அங்கு சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டவா்களுடன் உரையாடினாா். பின்னா் அவா்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினாா்.

தேகப் பயிற்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா், சின்னப்ப தேவருடன் உள்ள புகைப்படங்கள், திரைப்பட படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களைப் பாா்வையிட்டாா். இதில் தேகப் பயிற்சிக் கூடத்தில் கமல்ஹாசன் சிலம்பம் சுற்றிய விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின.

பின்னா் உக்கடம் பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு சென்று அங்கு கூடியிருந்த பொது மக்கள், மீன் விற்பனையாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தாா். மேலும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

உக்கடம் பேருந்து நிலையம் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநா்களை சந்தித்துப் பேசினாா். பின்னா் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். இதையடுத்து தான் வந்த காா் ஓட்டுநரிடம் விடுதிக்குச் செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்த ஆட்டோவில் ஏறி விடுதிக்குத் திரும்பினாா்.

கட்சி நிா்வாகிகள், புகைப்படக் கலைஞா்களுடன் புடைசூழச் சென்றால் பொதுமக்களிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்புக் கிடைக்காது என்ற காரணத்தால் தங்களை உடன் வர வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதாக கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் கூறினாா். இதைத் தொடா்ந்து, பிற்பகலில் கோவை நகைத் தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com