ஆட்சியா் அலுவலகத்தை அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் முற்றுகை
By DIN | Published On : 18th May 2021 06:46 AM | Last Updated : 18th May 2021 06:46 AM | அ+அ அ- |

ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளா்கள்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுவரை அவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்கள் 150க்கும் மேற்பட்டோா் சீருடையுடன் அரசு மருத்துவமனையில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்து திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை நுழைவாயிலிலே தடுத்து நிறுத்தினா்.
இது குறித்து ஒப்பந்தப் பணியாளா்கள் கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கரோனா பேரிடா் காலத்திலும் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கரோனா நோய்த் தொற்று காலத்திலும் விடாமல் பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி ஆகியோா் பணியாளா்களின் கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.